இயற்கை முறையிலான உணவுப் பொருட்களை உட்கொண்டு, தன் மனைவி புற்றுநோயை வென்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பேசியதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளது டாடா நினைவு மருத்துவமனை.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவி நவ்ஜத் கவுர் புற்றுநோயின் 4வது நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை உணர்ச்சிப்பெருக்குடன் பேசும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வேப்பிலைகள், கட்டி மஞ்சள், எலுமிச்சை, தேங்காய் ஆகியவற்றை தன் மனைவி உணவாக எடுத்துக்கொண்டதாகவும், இவற்றை உணவாக எடுத்துகொண்டாலே புற்றுநோயை குணப்படுத்த முடியும் என அந்தக் காணொளியில் பேசியிருந்தார் சித்து. அத்துடன் சில நாள்கள் சர்க்கரை, மாவுச்சத்து ஆகிய உணவுகளை தன் மனைவி தவிர்த்தாகவும், தினமும் காலை எழுந்தவுடன் அவர் எலுமிச்சைச் சாறு எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், `இப்படித் தொடர்ந்து 40 நாட்கள் செய்தால் புற்றுநோயை குணப்படுத்திவிட முடியும், வாழ்க்கை முறையை மாற்றினாலே புற்றுநோயை குணப்படுத்திவிடலாம். இதை உங்கள் அனைவரிடமும் கூறுவதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார் சித்து.
சித்துவின் காணொளிக்கு எதிர்வினையாற்றும் வகையில் டாடா நினைவு மருத்துவமனை இன்று (நவ.23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு,
`மார்பக புற்றுநோய்க்குத் தன் மனைவி எடுத்துக்கொண்ட சிகிச்சை தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. காணொளியில், சர்க்கரை மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளாமல் புற்றுநோயை எதிர்கொண்டதாகவும், மஞ்சள் மற்றும் வேம்பை உட்கொண்டு குணப்படுத்த முடியாத புற்றுநோயை குணப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகைய கூற்றுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த பொருட்கள் மீதான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இவற்றை புற்றுநோய்க்கான மருந்துகளாக உபயோகப்படுத்த எந்தவிதமான மருத்துவத் தரவுகளும் இல்லை.
புற்றுநோய் பாதிப்பு இருந்தால் நிரூபிக்கப்படாத வைத்திய முறைகளை எடுத்துக்கொண்டு நேரத்தைக் கடத்தாமல் புற்றுநோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அறுவை சிகிச்சை, கீமோ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மூலம் அதைக் குணப்படுத்த முடியும்’.