ANI
மருத்துவம்

மஹாராஷ்டிரத்தில் பரவி வரும் ஜிகா வைரஸ்: மத்திய அரசு ரெட் அலர்ட்

சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் வளாகங்களில் ஏடிஎஸ் கொசு பரவல் நடக்காமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது அவசியம்

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பரவி வருவதால், கொசு பரவலை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜிகா வைரஸால் மஹாராஷ்டிரத்தில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இன்று (ஜூலை 3) மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜிகா வைரஸ் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம். சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

`குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கட்டுமானப் பகுதிகள், நிறுவனங்கள், சுகாதார நிலையங்களில் கொசு பரவலை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஜிகா வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கம் குறித்து சமூக வளைதளங்களில் தகுந்த தகவல்களை மாநில அரசுகள் மக்களிடையே பரப்ப வேண்டும்

சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் வளாகங்களில் ஏடிஎஸ் கொசு பரவல் நடக்காமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது அவசியம். இது குறித்து கண்காணிக்க ஒரு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

ஜிகா வைரஸ் தொற்று இருக்கும் பகுதிகளில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வைரஸின் தாக்கம் இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் இருக்கும் சிசுக்களின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’.