இந்தியா

விவசாயிகளுக்கான பி.எம்.கிசான் திட்டத்தின் 17வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!

ராம் அப்பண்ணசாமி

18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைக்கத் தன் தொகுதியான வாரணாசிக்குச் சென்றுள்ளார்.

`க்ரிஷி சகி’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதல்களை வழங்கினார் பிரதமர்.

`பிரதமர் மோடி காசிக்கு வந்துள்ளார். 62 வருடங்களுக்குப் பிறகு இந்த நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் ஒரு அரசியல்வாதி பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடி உலகத்தில் இந்தியாவுக்கான தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது தலைமையின் கீழ் நாம் புதிய இந்தியாவைப் பார்க்கிறோம், அவரது தலைமையின் கீழ் உத்தரப் பிரதேசன் முன்னேறிச் செல்கிறது’ என இந்த விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

இந்த விழாவில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 20,000 கோடி நிதியை விடுவித்தார் பிரதமர். இதன் மூலம் 9.26 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் `இதுவரை பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 3.24 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

2019-ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வருடத்துக்கு ரூ. 6 ஆயிரம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.