ராமர் கோயில் திறப்பு விழாவை பாஜக/ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியாகக் கருதி இதைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி ஆகியோருக்குக் கடந்த மாதம் வழங்கப்பட்டது.
ராமரைக் கோடிக்கணக்கானவர்கள் வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். ஆனால், ராமர் கோயிலை ஆர்எஸ்எஸ்/பாஜக அரசியல் திட்டமாக மாற்றிவிட்டார்கள். முழுமையாகப் பணிகள் நிறைவடையாதபோதும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேர்தல் பலனைக் கருத்தில் கொண்டு திறப்பு விழாவை முன்கூட்டியே நடத்துகிறார்கள்.
2019-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் அதீர் ரஞ்சன் சௌதரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்த விழாவுக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரிக்கிறார்கள்" என்றார் அவர்.
ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பாஜக இதற்கு ஏற்பாடு செய்வதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி விமர்சித்தார்.