ANI
இந்தியா

மோடி பதவியேற்பு விழா: டெல்லி வரும் அண்டை நாடுகளின் தலைவர்கள்

ராம் அப்பண்ணசாமி

18வது பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த நிலையில், தலைநகர் டெல்லியில் ஜூன் 9 அன்று இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க இருக்கிறார் நரேந்திர மோடி.

இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாள், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை, மொரிஷியஸ், சீசெல்சு போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்தில் அண்டை நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் விருந்தினர்களுக்காக 8000 இருக்கைகள் அமைக்கப்படுவதாகவும், பதவியேற்பு விழா பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு ஏற்கனவே சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்கிறது. ஆனால் பதவியேற்க உள்ள நபர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.