இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த என்டிஏ

ராம் அப்பண்ணசாமி

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 11) பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது நீட் தேர்வை நடத்தும் என்டிஏ அமைப்பு.

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இது குறித்து கடந்த ஜூலை 8-ல் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் என்டிஏ அமைப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி ஜூலை 10 மாலைக்கு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி இன்று (ஜூலை 10) பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது என்டிஏ. பிரமாண பத்திரத்தில் என்டிஏ அமைப்பு அளித்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

`2024 நீட் தேர்வில் 63 முறைகேடு புகார்கள் பதிவாகின. விசாரணையின் முடிவில் 33 மாணவர்களின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 22 மாணவர்களுக்கு தேர்வெழுத 3 வருடங்கள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 9 மாணவர்களின் முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது’.

மேலும், இந்த வருடம் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது போலாகும் என்று பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளது என்டிஏ. இந்த வழக்கு தொடர்பாக நாளை (ஜூலை 11) மீண்டும் விசாரணை நடத்துகிறது உச்ச நீதிமன்றம்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ அமைப்பால் இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பீஹாரைச் சேர்ந்த ஒரு மாணவரும் அடக்கம். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மொத்தம் ஆறு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது சிபிஐ. இதில் ஒரு முதல் தகவல் அறிக்கை மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.