கோப்புப்படம் 
இந்தியா

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு: மசோதா நிறுத்திவைப்பு!

கிழக்கு நியூஸ்

கர்நாடகத்தில் தனியார் தொழில் துறையில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் தனியார் தொழில் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாவின் படி, தனியார் நிறுவனங்களில் மேலாண்மைப் பணியிடங்களில் கன்னட மக்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். மேலாண்மை சாராத பணியிடங்களில் 75% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்களில் உள்ள 'சி' மற்றும் 'டி' படிநிலையிலான பதவிகளில் 100% கன்னட மக்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். இந்த மசோதா, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் ஐடி உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தனியார் துறையிலிருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்கள்.

இந்திய ஐடி தொழில் அமைப்பான நாஸ்காம், கர்நாடக அரசின் இந்த முடிவு தொழில்நுட்பத் துறையைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டது. கர்நாடக மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% தொழில்நுட்பத் துறையின் மூலம் வருகிறது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வளர்ச்சிக்கு எதிரானது என்றும், கர்நாடகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், தங்களுடையத் தொழிலுக்கு உகந்த வேறு மாநிலத்தை நோக்கி நகருக்கூடும் என்ற எச்சரிக்கைக் குரல்கள் வலுவாக எழுந்தன.

இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"தனியார் தொழில் துறையில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும், அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து வரும் நாள்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்" என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.