கர்நாடக முதல்வர் சித்தராமையா (கோப்புப்படம்) ANI
இந்தியா

தனிப்பட்ட காரணங்களுக்காகவே கவுன்சிலர் மகள் கொலை: கர்நாடக முதல்வர்

கிழக்கு நியூஸ்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் தனிப்பட்ட காரணங்களுக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் நேஹா (21) சக கல்லூரி மாணவர் ஃபயாஸ் என்பவரால் கல்லூரி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். நேஹாவை பலமுறை குத்திக் கொலை செய்த காட்சி சிசிடிவே கேமிராவில் பதிவானது.

நேஹாவைக் கொலை செய்த ஃபயாஸைக் காவல் துறையினர் கைது செய்தார்கள். இவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

நேஹாவின் தந்தையும் காங்கிரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன், மகளின் கொலைக்குக் காரணம் 'லவ் ஜிஹாத்' என்று சந்தேகத்தை எழுப்பினார். எனினும், கர்நாடக முதல்வர் சித்தராமையா இதை மறுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

"இது லவ் ஜிஹாத் அல்ல. இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இது நடந்துள்ளது. குற்றவாளியைக் கைது செய்துள்ளோம். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தருவோம். அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்க சட்டம் ஒழுங்கை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறோம். பாஜக இந்த விவகாரத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. ஒரு பெண்ணின் கொலையை அரசியல் கட்சி, தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என்றார் அவர்.