ANI
இந்தியா

ஜூன் 23-ல் மத்திய பட்ஜெட்

ராம் அப்பண்ணசாமி

2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23-ல் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ல் தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ஏழாவது முறையாகத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் தொடர்ந்து ஆறு முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் (1959-1964) சாதனையை முறியடிக்கவுள்ளார் நிர்மலா சீதாராமன்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால் முழு பட்ஜெட் ஆக இல்லாமல், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார் மோடி. மத்திய அமைச்சரவையில் இரண்டாவது முறையாக நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார் நிர்மலா சீதாராமன்.