இந்தியா

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீ ராம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம்

2013-ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் கே.ஆர்.ஸ்ரீ ராம். கோல்ஃப் வீரரான இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்

ராம் அப்பண்ணசாமி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீ ராமை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். இதை அடுத்து மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக நியமித்தார் இந்திய குடியரசுத் தலைவர்.

இந்நிலையில் நீதிபதி ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீ ராமை சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் இதற்கான நியமன உத்தரவை பிறப்பிப்பார்.

நீதிபதி ஆர். மகாதேவன் கடந்த 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள கே.ஆர்.ஸ்ரீ ராம் 2013-ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கோல்ஃப் வீரரான இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

உச்ச நீதிமன்ற கொலீஜியமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ள மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அமைப்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் செயல்படும்.