மாணிக்ராவ் கோகடே - கோப்புப்படம் ANI
இந்தியா

சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்! | Online Rummy

பாஜகவுடன் கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், வேறு எதிலும் ஈடுபடாமல் வேளாண் அமைச்சருக்கு ரம்மி விளையாட நேரம் இருப்பதாகத் தெரிகிறது.

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அம்மாநில வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது கைபேசியில் ஆன்லைன் ரம்மி விளையாடும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த காணொளியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) எம்.எல்.ஏ. ரோஹித் பவார் தன் எக்ஸ் கணக்கில் பகிர்ந்து, கடுமையான வேளாண் சார்ந்த நெருக்கடியில் மாநிலம் சிக்கித் தவிக்கும் நேரத்தில் வேளாண் அமைச்சர் உணர்ச்சியற்றவராக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

ரோஹித் பவார் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,

`எண்ணற்ற வேளாண் பிரச்னைகள் நிலுவையில் இருந்தாலும், மாநிலத்தில் தினமும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டாலும், பாஜகவுடன் கலந்தாலோசிக்காமல் ஆட்சியில் இருக்கும் தேசியவாத கட்சியால் எதுவும் செய்ய முடியாது என்பதால், வேறு எதிலும் ஈடுபடாமல் வேளாண் அமைச்சருக்கு ரம்மி விளையாட நேரம் இருப்பதாகத் தெரிகிறது.

தவறாக வழிகாட்டப்பட்ட இந்த அமைச்சர்களும் அரசாங்கமும் பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் (குறைந்தபட்ட) விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவநம்பிக்கையான வேண்டுகோளை எப்போதாவது கேட்பார்களா? மகாராஜ், ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு வருகை தாருங்கள்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த மாணிக்ராவ் கோக்டே, `சட்டமேலவை ஒத்திவைக்கப்பட்டது, எனவே சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினேன். யூடியூப்பை திறக்க எனது கைபேசியை எடுத்தேன். யாரோ ஒருவர் எனது தொலைபேசியில் ஒரு விளையாட்டை பதிவிறக்கம் செய்ததாகத் தெரிகிறது.

விளையாட்டைத் தவிர்ப்பதற்காகவே முயற்சி செய்தேன், அப்போதுதான் யாரோ ஒருவர் காணொளியைப் பதிவு செய்துள்ளார். நான் விளையாட்டை தவிர்க்க மட்டுமே செய்தேன். முழு காணொளியும் வெளிவரவேண்டும். அதில் ஒரு சிறிய பாகம் மட்டுமே வைரலாக்கப்பட்டுள்ளது.

இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, ஆனால் அவர்களின் தந்திரங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது’ என்றார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாட்டை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே சுட்டிக்காட்டினார்.

குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை மாநில அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளதாக கூறினாலும், நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது ஒரு அமைச்சர் ரம்மி விளையாடுவதைக் காண முடிந்தது என்று அவர் கூறினார்.