இந்தியா

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

சுவாமிநாதன்

புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பங்கேற்கிறார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இந்தியா வந்து, 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியா, பிரான்ஸ் உறவின் 25-வது ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக 241 வீரர்கள் அடங்கிய முப்படை அணிவகுப்பு நடைபெறவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்தார்.

குடியரசு தின விழாவில் 6-வது முறையாக பிரான்ஸ் தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேக்ரானுக்கு முன்பு பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஜேக் சிராக் 1976 மற்றும் 1998-ம் ஆண்டு குடியரசு தின விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 1980, 2008 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் அப்போதைய பிரான்ஸ் அதிபர்கள் குடியரசு தின விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.