இந்தியா

குஜராத்தில் 700 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 8 ஈரானியர்கள் கைது!

கடந்த அக்டோபரில் குஜராத்தில் செயல்பட்டுவந்த தனியார் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில், சுமார் 518 கிலோ அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

குஜராத்தின் கடலோரப் பகுதியில் இன்று (நவ.15) 700 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் வைத்து இன்று (நவ.15) சுமார் 700 கிலோ அளவிலான மெத் என்று அழைக்கப்படும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம்பகத்தன்மையான உளவுத்தகவலை முன்வைத்து, சாகர் மாந்தன் – 4 என்ற பெயரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, இந்திய கடற்படை, குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் முயற்சியின் பலனாக இத்தகைய பெரிய அளவு எடையிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

`போதை இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், தோராயமாக 700 கிலோ மெத்தபெட்டமைனைக் கைப்பற்றி, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைதுசெய்யப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் குஜராத் மாநில காவல்துறையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கை எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது’ என இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பாக தன் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளது மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு.

மேலும், இந்த போதைப் பொருள் பறிமுதல் நிகழ்வை பாராட்டி, தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. குஜராத்தில் செயல்பட்டுவந்த தனியார் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கடந்த அக்டோபரில் சுமார் 518 கிலோ அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.