ANI
இந்தியா

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர ஆர்வம்: பிரதமர் மோடி

கடந்த ஆண்டு இதே நாளில் நிலவின் தென்துருவத்தில் உள்ள சிவ-சக்தி புள்ளியில் சந்திரயான் - 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியது

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தான் பேசியதை அடுத்து அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர ஆர்வமாக உள்ளனர் என்று தன் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

2014-ல் இந்திய பிரதமராகப் பதவியேற்ற பிறகு ஓவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில் பிரதமரின் 113-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 25) ஒலிபரப்பானது. அதில் பிரதமர் பேசியவை பின்வருமாறு:

`இந்த ஆண்டு செங்கோட்டையில் அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் தங்களை அரசியலில் இணைத்துக்கொள்ளுமாறு நான் வலியுறுத்தி இருந்தேன். எனது இந்தக் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அதிக அளவிலான இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர ஆர்வமுடன் இருப்பதை நாம் அறிய முடிகிறது.

ஆகஸ்ட் 23-ல் நாட்டின் முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் நிலவின் தென்துருவத்தில் உள்ள சிவ-சக்தி புள்ளியில் சந்திரயான் - 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையைப் படைத்தது இந்தியா.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. வருடம் முழுவதும் அவர்களின் ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நாடு முழுவதும் அதற்கு சிறப்பான வகையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

வரும் சில நாட்களில் பாரிஸில் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. நம் மாற்றுத்திறனாளி சகோதரர்களும், சகோதரிகளும் அங்கே சென்றுள்ளனர். 140 கோடி இந்தியர்களும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்’.