இந்தியா

மோடியின் மூன்றாவது அமைச்சரவையின் இளம் மத்திய அமைச்சர்: யார் இந்த ராம் மோகன் நாயுடு?

ராம் அப்பண்ணசாமி

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்திய பிரதமராகப் பதவியேற்கிறார். இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார் எனச் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் 36 வயது ராம் மோகன் நாயுடு நாட்டின் இளம் வயது மத்திய அமைச்சராகவுள்ளார்.

2014 ல் 26 வயதில் முதல் முறையாக மக்களவை எம்.பி.யானார் ராம் மோகன் நாயுடு. மக்களவை உறுப்பினராக இவரது செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் 2020 ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றார். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களைத் தன் தொகுதியில் முன்னெடுத்துள்ள ராம் மோகன் நாயுடு, மாதவிடாய் சுகாதாரம், பாலியல் கல்வி போன்றவற்றின் அவசியம் குறித்து மக்களவையில் உரையாற்றியுள்ளார்.

ராம் மோகன் நாயுடுவின் தந்தை எர்ரன் நாயுடு ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாகவும், தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ராம் மோகன் நாயுடுவின் சித்தப்பா அட்சன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவராவார்.