பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்  
இந்தியா

கெஜ்ரிவாலைக் கைது செய்யலாம், ஒடுக்க முடியாது: பஞ்சாப் முதல்வர்

கிழக்கு நியூஸ்

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை நீங்கள்  கைது செய்யலாம். ஆனால், அவரது கொள்கைகளை ஒடுக்க முடியாது என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கட்சிக்கும் அவருக்கும் அளித்து வரும் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் பகவந்த் மான் இதைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்யலாம். ஆனால் அவரது கொள்கைகளை, சிந்தனைகளை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. மலைபோல் நின்று நாங்கள் அவருக்கு ஆதரவு தருகிறோம்”. இன்குலாப் ஜிந்தாபாத் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் பிரிவுபோல செயல்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சட்டத்தின் மூலம் சந்திப்போம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம், நாடாளுமன்றத்தில் எழுப்புவோம், தெருவில் இறங்கி போராடுவோம். அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் எதிர்த்துப் போராடுவோம் என்று பஞ்சாப் அமைச்சர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

கெஜ்ரிவாலின் ஆட்சியை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்ததுபோல் கெஜ்ரிவால் வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். .

நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் தடுப்பதே மத்திய அரசின் நோக்கமாகும் என்றார்.

மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து தில்லி முதல்வர் கெஜ்ரிவால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் நீதிமன்றக் காவலில் உள்ளார்கள்.