மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது, யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம்.
சிவப்பு மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளில் விதிமுறைகளுக்கு மாறாக பூச்சிக்கொல்லி கலப்பு உள்ளதால் அந்த பாக்கெட்டுகளைத் திரும்பப் பெறுமாறு பதஞ்சலி நிறுவனத்துக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. என்கிற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கடந்த ஜனவரி 13 அன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து சந்தையில் உள்ள தங்கள் நிறுவனத்தின் மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
`மிளகாய்த் தூள் உள்பட பல்வேறு உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி கலப்பில் இருக்கவேண்டிய உச்சவரம்பை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. நிர்ணயித்துள்ளது. அதன்படி, பதஞ்சலி மாதிரிகளைச் சமீபத்தில் பரிசோதனை செய்தபோது அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பூச்சிக்கொல்லி கூடுதலாக இருந்தது தெரியவந்தது’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து. எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரத்தைப் பூர்த்தி செய்யாத 200 கிராம் சிவப்பு மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், பதஞ்சலி மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளைத் திரும்ப ஒப்படைக்க வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திரும்பப் பெறப்படும் பாக்கெட்டுகளின் அளவு மிகக்குறைவானது. வாடிக்கையாளர்களால் திருப்பி அளிக்கப்படும் பாக்கெட்டுகளுக்கு உண்டான முழுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், பதஞ்சலி நிறுவனம் தரத்தில் உறுதியாக இருப்பதாகவும், தரத்தைப் பின்பற்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் சஞ்சீவ் அஸ்தானா கூறியுள்ளார்.