https://x.com/YSRCParty
இந்தியா

ஆந்திர முதல்வர் தொகுதியில் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து துன்புறுத்தல்! (வீடியோ)

கடன் பிரச்னை தொடர்பாக கடன் வாங்கியவரின் மனைவி மரத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஆந்திர மாநிலம் சித்தூரில் கடனைத் திருப்பிச் செலுத்தாத பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் சித்தூரில் நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள் திம்மராயப்பா மற்றும் சிரிஷா. மூன்றாண்டுகளுக்கு முன் முனிகண்ணப்பா என்பவரிடமிருந்து திம்மராயப்பா ரூ. 80 ஆயிரம் கடன் பெற்றதாகத் தெரிகிறது. திம்மராயப்பாவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

திம்மராயப்பா வேலை காரணமாக பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கிருந்தபடி சிறு தவணையாக கடனைத் திருப்பிச் செலுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவருடைய மனைவியும் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரிகிறது. குழந்தையின் பள்ளிச் சான்றிதழைப் பெறுவதற்காக நாராயணபுரம் கிராமத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிலிருந்த சிரிஷாவை முனிகண்ணப்பா இழுத்து வந்து மரத்தில் கட்டிவைத்துள்ளார்.

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சிரிஷாவை முனிகண்ணாப்பாவின் மனைவி மற்றும் உறவினர் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் வருகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனத்துக்கு இச்சம்பவம் சென்ற நிலையில், இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சிரிஷாவை காவல் துறையினர் மீட்டுள்ளார்கள். முனிகண்ணப்பா மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முனிகண்ணப்பா தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.