சத்தீஸ்கர் மேயர் பொறுப்புக்கான பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்பு விழாவின்போது பாஜகவைச் சேர்ந்த பூஜா விதானி வகுப்புவாதத்தை நிலைநிறுத்துவேன் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 3,200 வார்டுகளில் 1,868-ல் பாஜகவும், 952-ல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளும், 380-ல் சுயேட்சைகளும் வெற்றிபெற்றார்கள்.
குறிப்பாக, பிலாஸ்பூர் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில், 49 வார்டுகளை பாஜக கைப்பற்றியதை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த பூஜா விதானி மேயராக தேர்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிலாஸ்பூரின் முங்கேலி நாகா மைதானத்தில் இன்று (மார்ச் 2) பூஜா விதானியின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ் மற்றும் மத்திய இணையமைச்சர் டொக்ஹன் சாஹு ஆகியோர் பங்கேற்றார்கள். பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்பு வரிகளை பூஜா விதானி வாசித்தபோது, `இந்தியாவின் வகுப்புவாதத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன்’ என்று கூறினார்.
இறையாண்மை என்ற வார்த்தைக்குப் பதிலாக தவறுதலாக வகுப்புவாதம் என்ற வார்த்தையை பூஜா விதானி உபயோகப்படுத்தியதை அடுத்து கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. உடனடியாக குறுக்கிட்ட பிலாஸ்பூர் ஆட்சியர் அவ்னிஷ் குமார் ஷரன், மீண்டும் அவரை இரண்டாவது முறையாக பதவிப் பிரமாண உறுதிமொழியை ஏற்க வைத்தார்.
பாஜக மேயர் வகுப்புவாதம் என்ற வார்த்தையை தவறுதலாக கூறியதை அடுத்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.