Will bring law to operationalize 'bail is the rule, jail is the exception' principle: Congress leader Chidambaram 
இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வோம்: ப. சிதம்பரம்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராகுல் காந்தியும், காங்கிரஸும் மௌனம் காப்பது ஏன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்பு விமர்சித்திருந்தார்.

கிழக்கு நியூஸ்

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் எதிர் துருவங்களாக உள்ளன. இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராகுல் காந்தியும், காங்கிரஸும் மௌனம் காப்பது ஏன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் உறுதியாக இருப்பதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்து, திருத்தம் மேற்கொண்டு, ஆய்வுக்குட்படுத்தவுள்ள சட்டங்களில் முதன்மையானது குடியரிமை திருத்தச் சட்டம். இதற்கடுத்து வேளாண் சட்டங்கள் மற்றும் மூன்று குற்றவியல் சட்டங்கள். இந்த 5 சட்டங்களும் ரத்து செய்யப்படும்.

இதற்கடுத்தபடியாக 8 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். இதன்பிறகு, 25 சட்டங்கள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டங்களுக்கு ஏற்ப, இந்தச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வோம். ஆக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சசி தரூர் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்தச் சட்டத்தை பிரியங்கா காந்தி எதிர்த்துள்ளார்" என்றார் சிதம்பரம்.

கேரளத்தில் ஏப்ரல் 26-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.