தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் நிலவுவதாக இடம்பெற்றுள்ள கருத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல் இருப்பதாகவும், வழக்குகள் முடிவடைய நீண்ட காலம் எடுப்பதாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
புத்தகத்தில் இருப்பது என்ன?
இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி பாடப்புத்தகத்தில், “நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்கிறார்கள். ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும், இது நீதியைப் பெறுவதில் உள்ள சிக்கலை மேலும் மோசமாக்கக்கூடும். எனவே, நீதி அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உட்படப் பல்வேறு முயற்சிகள் மாநில மற்றும் மத்திய அளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஊழல் புகார்கள் எங்கு எழுந்தாலும் அவற்றின் மீது விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புள்ளி விவகரங்களின்படி உச்ச நீதிமன்றத்தில் சுமார் 81,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் சுமார் 62.40 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஏறத்தாழ 4.70 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன” என்று அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
மூத்த வழக்கறிஞர்கள் கவலை
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சங்க்வி மற்றும் முகுல் ரோட்டகி ஆகியோர் தங்கள் கண்டனங்களை இன்று பதிவு செய்தனர். இதுகுறித்து கபில் சிபல் கூறுகையில், “எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதித்துறையில் ஊழல் நிலவுவது குறித்துப் பயிற்றுவிக்கப்படுவதைக் கண்டு, நீதிமன்றத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம். இது என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மாண்பைக் காப்பதில் எங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது; இது முற்றிலும் அவதூறான செயலாகும். அந்தப் பாடப்புத்தகத்தின் பிரதிகள் எங்களிடம் உள்ளன.” என்று தெரிவித்தார்.
மற்ற துறைகளில் ஊழலே இல்லையா?
தொடர்ந்து பேசிய ஏ.எம். சங்க்வி, “புத்தகத்தில் உள்ள கருத்துகளில் குறிப்பாக நீதித்துறையைத் திட்டமிட்டே குறித்துள்ளார்கள். அரசுத்துறையில், அரசியலில், பொதுவாழ்வில் மற்ற துறைகளில் எல்லாம் ஊழலே கிடையாதா? வேறு எங்குமே ஊழல் இல்லாதது போல் கூறப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இது கணக்கிடப்பட்டு, ஆழமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பது போல் உணர்கிறேன். ஆனால் இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து ஜோதிமால்ய பக்சியும் “அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு இருக்க வேண்டிய ஒருமைப்பாடு, இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பில் முற்றிலும் விடுபட்டுள்ளது” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும்
அதைத் தொடர்ந்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது:-
"ஒரு நாள் பொறுத்திருங்கள். இது ஒட்டுமொத்த நீதித்துறையையும் சார்ந்தது என்பதில் சந்தேகமில்லை. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இதனால் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு தரப்பினரும் உண்மையில் கலக்கமடைந்துள்ளனர்; எனக்கு ஏராளமான அழைப்புகளும் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீங்கள் இதைக் குறிப்பிட்டதால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன், நான் ஏற்கனவே இது குறித்து ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளேன்; மேலும், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும். இந்த உலகின் எந்தவொரு சக்தியும் நீதித்துறையின் நேர்மையைக் களங்கப்படுத்தவோ அல்லது அவதூறு பரப்பவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். எந்த விலைகொடுத்தாவது இதனை நான் தடுத்தே தீருவேன். அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும். இதனை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்குத் தெரியும்" என்று தெரிவித்தார்.
The Supreme Court on Wednesday strongly objected to portions of a new Class 8 Social Science textbook released by the National Council of Educational Research and Training (NCERT) that refer to “corruption in the judiciary.”