முதல்வர் ஓமர் அப்துல்லா ANI
இந்தியா

நதி நீர் பகிர்வுக்கு ஓமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் சாடல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஜம்மு காஷ்மீரைவிட பஞ்சாபை அதிகமாக பாகிஸ்தான் தாக்கியது.

ராம் அப்பண்ணசாமி

சிந்து நதி அமைப்பின் மூன்று மேற்கு நதிகளின் உபரி நீரை ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுடன் பகிர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இண்டியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளன.

113 கி.மீ. நீளமுள்ள புதிய கால்வாய் வழியாக, ஜம்மு காஷ்மீரில் இருந்து உபரி நீரை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். அத்தகைய நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு ஓமர் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியதாவது,

`இதை ஒருபோதும் நான் அனுமதிக்க முடியாது. எங்கள் நீரை முதலில் நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம். ஜம்முவில் வறட்சி நிலவுகிறது. எதற்காக நான் பஞ்சாபிற்கு நீரை அனுப்பவேண்டும்? சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ் பஞ்சாபிற்கு ஏற்கனவே நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் தேவைப்பட்டபோது அவர்கள் தண்ணீர் வழங்கினார்களா?’ என்றார்.

ஓமர் அப்துல்லாவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் எம்.பி. சுக்வீந்தர் சிங் ரந்தாவா பேசியதாவது,

`இதுபோல பேசுவது மூலம், அவர் தேசபக்தி என்ற கருத்தாக்கத்தை இழிவுபடுத்தக்கூடாது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஜம்மு காஷ்மீரைவிட பஞ்சாபை அதிகமாக பாகிஸ்தான் தாக்கியது. பஞ்சாப் மற்றும் அதன் விவசாயிகளின் தேசபக்தி வலுவாக இருக்கும் வரை, இந்தியா வலுவாக இருக்கும். அவரது இத்தகைய கருத்தால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்றார்.

கால்வாய் வழியாக சிந்து நதியின் நீர் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்திற்கு அடுத்த மூன்றாண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் என்று கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.