இந்தியா

திருமணம் எப்போது?: ராகுல் காந்தி பதில்

கிழக்கு நியூஸ்

தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மக்களிடமிருந்து வந்த கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரலியில் போட்டியிடுகிறார். ரே பரலியில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

ரே பரலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக இன்று ரே பரலி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்ட மேடையில் அவர் தனது உரையை நிறைவு செய்யும்போது, தனது தங்கை பிரியங்கா காந்தியை அருகில் அழைத்து, அவரது தோள் மீது கை போட்டு, "தேர்தலுக்காக நான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து வருகிறேன். ஆனால், எனது தங்கை இங்கு நேரத்தை செலவிட்டு வருகிறாள். அவருக்கு மிகப் பெரிய நன்றிகள்" என உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.

பிரியங்கா காந்தி உடனடியாக ஒலிப் பெருக்கியில், அங்கிருந்து (மக்களிடமிருந்து) வந்த கேள்விக்குப் பதில் சொல் என்று ராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்டார்.

மக்களிடமிருந்து, திருமணம் எப்போது என்று கேள்வி வந்தது. இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்றார்.

ராகுல் காந்தியின் இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.