இந்தியா

பாஜக தலைமை அலுவலகம் வருகிறோம், யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள்: கெஜ்ரிவால்

கிழக்கு நியூஸ்

ஆம் ஆத்மி முக்கியத் தலைவர்களுடன் நாளை நண்பகல் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்குச் செல்லவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பிணையில் வெளியே வந்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஜூன் 1 வரை பிணை வழங்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் இன்னும் சிறையில் உள்ளார்கள்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் இன்று தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு ஒன்று காணொளியாக வெளியாகியுள்ளது.

"ஆம் ஆத்மியை எப்படி வேட்டையாடி வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் சிறை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் பிரதமர் மோடி. நாளை ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியத் தலைவர்கள் அனைவரும் நண்பகல் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகம் வருகிறோம். யாரை வேண்டுமானாலும் சிறையிலடைத்துக் கொள்ளுங்கள்.

அனைவரையும் சிறைக்கு அனுப்பி ஆம் ஆத்மியை ஒடுக்க முடியும் என நினைக்கிறீர்களா? அதற்கு சாத்தியமில்லை. காரணம், ஆம் ஆத்மி என்பது ஒரு சிந்தனை" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.