பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்) படம்: https://twitter.com/narendramodi
இந்தியா

வாரணாசியில் மோடியை எதிர்த்து மூன்றாவது முறையாகக் களமிறங்கும் அஜய் ராய்!

ஜெ. ராகவன்

தோல்விமேல் தோல்வி கண்டபோதிலும், உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய், மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்கிறார்.

 பாகுபலி (வலுவானவர்) என்று அறியப்பட்ட 54 வயதான அஜய்ராய், இதற்கு முன் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியால் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டவர். இரண்டு தேர்தல்களிலும் அவருக்கு மூன்றாவது இடமே கிடைத்தது.

கடந்த காலங்களில் அவரது சாதனை எப்படியிருந்தாலும் உத்தரப் பிரதேசத்தில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அஜய் ராயை, கட்சி மேலிடம் மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது. பிரிஜ்லால் காப்ரி என்னும் தலித் தலைவர் சரிவர செயல்படாததால் அவருக்குப் பதிலாக காங்கிரஸ் இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பூர்வாஞ்சல் பகுதியில் வலிமையான நபராகக் கருதப்படும் அஜய் ராய், முதன் முதலாக பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1996, 2002 மற்றும் 2007 இல் உ.பி. மாநிலம், கோலஸ்லா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார்.

2009 ஆம் ஆண்டு சமாஜவாதி கட்சியில் சேர்ந்த அவர், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷியிடம் தோல்விகண்டார். அடுத்து 2012 இல் காங்கிரஸில் சேர்ந்தார். அந்த ஆண்டு தேர்தலில் பிந்த்ரா (முன்பிருந்த கோலஸ்லா தொகுதி) தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். எனினும் 2017 மற்றும் 2022 தேர்தலில் பிந்த்ரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியையே சந்தித்தார்.

அஜய் ராய், 2014 முதல் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து வருகிறார். தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிராக இருந்தாலும், அவரது பூமிஹார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருப்பதால் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ராய் சவாலாக இருப்பார் என்ற காரணத்தினாலேயே அவரை காங்கிரஸ் களத்தில் இறக்கியுள்ளது.