இந்தியா

பாஜக தலைவர்களிடம் பிரமாணப் பத்திரத்தைக் கேட்காதது ஏன்?: ராகுல் காந்தி | Rahul Gandhi

"ஏழைகளிடம் வாக்கு அதிகாரம் மட்டுமே உள்ளது. அதைப் பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்."

கிழக்கு நியூஸ்

தன்னிடம் கேட்கும் பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் ஏன் பாஜக தலைவர்களிடம் கேட்கவில்லை என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

பிஹாரில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிஹார் முழுக்க 1,300 கி.மீ.-க்கு வாக்காளர் அதிகார யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்கிறார். இப்பயணத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றார்கள்.

இதுதொடர்புடைய கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக பிஹாரில் 20 மாவட்டங்களில் வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுக்க சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் திருடப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய சதித் திட்டம் தான் பிஹாரில் தேர்தலைத் திருட தீவிர சிறப்புத் திருத்தம் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு நீக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது, வாக்குகள் எப்படி திருடப்படுகிறது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும்.

வாக்குத் திருட்டு குறித்த என் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் கேட்கிறது. பாஜக தலைவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்தபோது ஏன் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தைக் கேட்கவில்லை.

பிஹாரில் தேர்தலைத் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏழைகளிடம் வாக்கு அதிகாரம் மட்டுமே உள்ளது. அதைப் பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எல்லா தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறுகிறது. மஹாராஷ்டிரத்தில் எல்லா கருத்துக் கணிப்புகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வென்றது. ஆனால், அடுத்த 4 மாதங்களில் அதே மஹாராஷ்டிரத்தில் புதிதாக ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் பாஜக தேர்தலில் வென்றது" என்றார் ராகுல் காந்தி.

Rahul Gandhi | Congress | Voter Adhikar Yatra | Election Commission | Affidavit | Bihar | Bihar Election | Bihar Assembly Election | Bihar SIR