இந்தியா

மஹாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஏக்நாத் ஷிண்டே: அடுத்த முதல்வர் யார்?

ஏக்நாத் ஷிண்டே அறிமுகப்படுத்திய மாதம் ரூ. 1500 உதவித்தொகை வழங்கும் லட்கி பஹின் திட்டத்தால் இந்தப் பெருவெற்றி சாத்தியமானது.

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிரத்தின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே.

மும்பை ராஜ் பவனில் மஹாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று (நவ.26) தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன், புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக நீடிக்குமாறு ஏக்நாத் ஷிண்டேவை அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உடனிருந்தனர். 288 இடங்களைக் கொண்ட மஹாராஷ்டிர சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் 235 இடங்களைக் கைப்பற்றியது பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி. ஆனால் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

18 முதல் 65 வயதிலான பெண்களுக்கு மாதம் ரூ. 1500 உதவித்தொகை வழங்கும் லட்கி பஹின் திட்டத்தை ஏக்நாத் ஷிண்டே அறிமுகப்படுத்தியதால்தான் இந்தப் பெருவெற்றி சாத்தியமானதாகவும், அதனால் முதல்வர் பதவியில் ஏக்நாத் ஷிண்டே தொடர வேண்டும் எனவும் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிக இடங்களைக் கைப்பற்றாவிட்டாலும், நிதீஷ் குமாரை பிஹாரில் முதல்வராக்கியது பாஜக. இதே போன்ற நடைமுறையை மஹாராஷ்டிராவிலும் பின்பற்ற வேண்டும் என சிவசேனா எம்.பி. நரேஷ் மஸ்கே குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக வேண்டும் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட வகையில் 132 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். தேவேந்திர பட்னாவிஸுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இன்னும் ஓரிரு நாட்களில் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.