வரலாற்றாசிரியரும், அரசியல் ஆய்வாளரும், அசோகா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான அலி கான் மஹ்முதாபாத், கடந்த மே 18 அன்று தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஹரியாணா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா மேற்கொண்டது. அது தொடர்பாக பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த நிகழ்வை கேள்விக்குள்ளாக்கும் வகையில், சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த அலிகான்?
உத்தர பிரதேச மாநிலத்தின் மஹ்முதாபாத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அலி கான் மஹ்முதாபாத். இவரது தந்தையான மொஹமத் அமீர் மொஹமத் கான், இருமுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்தவர். எதிரி சொத்து சட்டத்தின் கீழ் அரசால் கையகப்படுத்தப்பட்ட தன் குடும்ப சொத்துகளை மீட்க நீண்ட சட்டப்போராட்டத்தை இவர் நடத்தியுள்ளார்.
அலி கானின் தாத்தாவான, மொஹமத் அமீர் அஹமத் கான், மஹ்முதாபாத்தின் சமஸ்தானத்தின் கடைசி மன்னராவார். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு முஸ்லிம் லீக் கட்சிக்கு நிதி வழங்கி வந்தவர்கள் அவர் முக்கியமானவர். ஜின்னாவின் நெருங்கிய நண்பரான அஹமத் கான், பிரிவினைக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறி பின்னர் பாகிஸ்தானில் குடிபெயர்ந்தார்.
அத்துடன், அலி கானின் தாய்வழித் தாத்தா, ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜகத் சிங் மேத்தா ஆவார்.
2 டிசம்பர், 1982 அன்று மொஹமத் அமீர் மொஹமத் கானின் மகனாக உ.பி. மாநிலம் லக்னோவில் பிறந்த அலி கான் மஹ்முதாபாத், உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தேசியவாதம், இஸ்லாம் அரசியல், தெற்காசிய வரலாறு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார்.
ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தை தற்போது அலி கான் பயிற்றுவிக்கிறார். காலனித்துவ இந்தியாவில் இஸ்லாமிய அரசியல் கற்பனையை ஆராயும் இவரது 'பொயட்ரி ஆஃப் பிலாங்கிங்’ புத்தகம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு பத்திரிகைகள் மற்றும் ஆய்விதழ்களில் அவரது கட்டுரைகள், பத்திகள் போன்றவை வெளியாகியுள்ளன. அடையாள அரசியல், ஜனநாயகம், மத பன்முகத்தன்மை தொடர்பான பிரச்னைகள் குறித்த நுட்பமான கருத்துகளை அவரது கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.
உருது, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய அலி கான், இந்தியாவின் பன்மொழி கல்வியாளர்களில் ஒருவராவார். சிரியாவின் டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியைப் பயின்றுள்ள இவர், ஈரான் மற்றும் ஈராக்கில் பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
2017-ல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த அலி கான், 2022 வரை அதன் தேசிய செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஓரிரு ஆண்டுகளாக முழு நேர அரசியலில் இருந்து அவர் விலகியுள்ளாலும், தனது எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் தேசியப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
அலி கான் மீதான வழக்கின் பின்னணி
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியாணா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக சோனிபட் துணை காவல் ஆணையர் நரேந்தர் கடியன் கூறியுள்ளார்.
இந்நிலையில், அலி கான் மஹ்முதாபாத் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் குறித்து அவசர வழக்காக விசாரிக்குமாறு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாய்மொழியாக நேற்று (மே 19) முன்வைத்த கோரிக்கையை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஏற்றுக்கொண்டார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான தனது சமூக ஊடகப் பதிவு குறித்து, கைதுக்கு முன்பு அவர் தன்னிலை விளக்கமளித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கையெழுத்திட்டு, அலி கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.