மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
பாஜக 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனை 55 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கூட்டணியாக 220-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
வெற்றி கிடைத்தவுடன், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுத் தொடங்கியுள்ளது.
தானேவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இறுதி முடிவுகள் வெளியாகட்டும். அதன்பிறகு, தேர்தலை எப்படி ஒன்றாக எதிர்கொண்டோமோ அதேபோல, முதல்வர் யார் என்பதையும் மூன்று கட்சிகளும் அமர்ந்து ஒன்றாக முடிவு செய்வோம்" என்றார்.
ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 148 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 127 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. எனவே, தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராவதற்கு இது உதவ வாய்ப்புள்ளது.
முதல்வர் வேட்பாளர் குறித்து ஃபட்னவீஸ் கூறுகையில், "முதல்வர் யார் என்பதில் எந்தப் பிரச்னையும் கிடையாது. தேர்தலுக்குப் பிறகு மூன்று கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வோம் என்பதை முதல் நாளிலேயே முடிவு செய்யப்பட்டதுதான். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக முடிவு இருக்கும். இதில் எந்தப் பிரச்னையும் இருக்காது" என்றார் தேவேந்திர ஃபட்னவீஸ்.