இந்தியா

நிதி எங்கிருந்து வரும்?: பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி!

வளர்ச்சிக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 37,000 கோடியாக இருக்கும்போது, பட்ஜெட்டின் 60 சதவீத தொகையை ஒரு திட்டத்திற்காக மட்டுமே எப்படி ஒதுக்க முடியும்?

ராம் அப்பண்ணசாமி

பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் தில்லி பாஜக அரசின் உதவித்தொகைக்கான நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்‌ஷித்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து 26 வருடங்கள் கழித்து அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலை ஒட்டி பாஜக வழங்கிய வாக்குறுதியின்படி தில்லி மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் மஹிளா சம்ரிதி யோஜனாவை இன்று (மார்ச் 8) முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்‌ஷித் கூறியதாவது,

`வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றிவிட்டால் அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வரும்?

18 வயதிற்கு மேல் உள்ள அனைத்து பெண்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்று பாஜக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தோராயமாக 72 லட்ச பெண் வாக்காளர்கள் தில்லியில் உள்ளார்கள். எனவே இதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 21,600 கோடியாக இருக்கும்.

மருத்துவமனைகள், பள்ளிகள், மானியங்கள் என வளர்ச்சிக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 37,000 கோடியாக இருக்கும்போது, பட்ஜெட்டின் 60 சதவீத தொகையை ஒரு திட்டத்திற்காக மட்டுமே எப்படி ஒதுக்க முடியும்? தில்லி அரசு செலவிடும் தொகையானது வளர்ச்சியை பாதிக்காது என நம்புகிறேன்’ என்றார்.

உதவித்தொகை விவகாரத்தை முன்வைத்து, தில்லி அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி ஆம் ஆத்மி கட்சியினருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்.