ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கும் இந்த வேளையில் 2012-ல் இதே போல் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியதற்காக ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்தது நினைவுகூரப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் 2012- 13 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. இதனை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். அப்போது பயணிகள் ரயில்வே கட்டண உயர்வை நாடாளுமன்றத்தில் அவர் அறிவித்தார்.
அப்போதைய காலகட்டத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்வு நடவடிக்கையாக அது அமைந்தது. வெவ்வேறு வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 3 பைசா வரை உயர்த்தி அவர் அறிவித்தார். இதன்மூலம் ரயில்வே கட்டுமானங்களை சிறந்த வகையில் மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களையும், 21 புதிய பயணிகள் ரயில்களையும், 8 மெமு ரயில்களையும் இயக்க முடியும் என்று தினேஷ் திரிவேதி பேசினார்.
அவரது ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விலை ஏற்றத்தின்படி, புறநகர் மற்றும் சாதாரண இரண்டாம் வகுப்புக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா; மெயில்/எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்புக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 3 பைசா; ஸ்லீப்பர் வகுப்புக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 பைசா; ஏசி சேர் கார், ஏசி 3 டயர் மற்றும் முதல் வகுப்புக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசா; ஏசி 2 டயர்க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 15 பைசா மற்றும் ஏசி 1 டயர்க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசா என கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் ரூ. 5 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டன.
“சாதாரண மக்களுக்கு குறைந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுமையைத் தாங்கும் அளவிலும் கட்டணங்களை சீரமைக்க முன்மொழியப்படுகிறது” என்று தனது உரையின்போது தினேஷ் திரிவேதி தெரிவித்தார். ஆனால், அவரது உரை முடிந்த உடனேயே ரயில் கட்டணத்தின் விலை ஏற்றத்தைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே எதிர்த்தனர். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி, “ரயில் கட்டணங்களில் உயர்வு பொதுமக்களைப் பாதிக்க நான் விடமாட்டேன். நாங்கள் இந்த விலை ஏற்றத்திற்கு எதிரானவர்கள்” என்று தெரிவித்தார்.
ரயில்வே டிக்கெட் விலை ஏற்றம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், தனது ரயில்வே அமைச்சர் பதவியை தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்தார். ”பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த நான் மேற்கொண்ட முயற்சி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. கட்சியின் விசுவாசமான போராளி நான்” என்று குறிப்பிட்டு ராஜினாமா செய்தார் தினேஷ் திரிவேதி. அவரைத் தொடர்ந்து முகுல் ராய் ரயில்வே அமைச்சராகப் பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலையில் 500 கிலோ மீட்டருக்கு அப்பால் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 50 பைசா என்ற வகையில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
In India's political history, a railway minister had to once put in his papers after hiking train tickets. The opposition came from his own political party, a coalition partner at the Centre, demanding for its nominee minister's resignation and a rollback of the fare hike.