PRINT-89
இந்தியா

மைக் அணைக்கப்பட்டதாக மமதா கூறியது முற்றிலும் தவறானது: நிர்மலா சீதாராமன்

ராம் அப்பண்ணசாமி

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறு, நிதி ஆயோக் கூட்டத்தில் பேச ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் உரிய நேரம் ஒதுக்கப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று (ஜூலை 27) காலை பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி ஆயோக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த வேளையில், ஒரே எதிர்க்கட்சி முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டார்.

ஆனால் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது பாதியிலேயே வெளியேறிய மமதா பானர்ஜி, `நான் பேசிக் கொண்டிருந்தபோது என் மைக் அணைக்கப்பட்டது. 5 நிமிடங்கள் மட்டுமே எனக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனக்கு முன்பு பேசியவர்களுக்கு 10-20 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.

நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `முதல்வர் மமதா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசியதை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வர்களுக்கும் அவர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாகக் கூறியது முற்றிலும் தவறானது.

மேற்கு வங்க முதல்வர் அப்படிக் கூறியது மிகவும் துரதிஷ்டவசமானது. ஏனென்றால் நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் பங்கேற்றதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்திருந்தால் பிற மாநில முதல்வர்கள் போல அவர் பேசுவதற்குக் கூடுதல் நேரம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் இதையே ஒரு காரணமாக வைத்து வெளியேறிவிட்டார்’ என்றார்.