ANI
இந்தியா

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற யஷ்வந்த் வர்மா: குற்றச்சாட்டின் நிலை என்ன?

பணியிட மாற்றத்தை எதிர்த்து அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் போராட்டம் நடத்தியது.

ராம் அப்பண்ணசாமி

பணக்கட்டுகளை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு ஆளாகி, விசாரணை வளையத்தில் உள்ள நீதிபதி யஷ்வந்த வர்மா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தபோது, கடந்த மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ வீட்டின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் எரிந்த நிலையில் பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்த பணத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாயவுக்கு எழுதிய நீதிபதி வர்மா கடிதம் எழுதினார்.

அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தில்லியில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்குக் கடந்த மார்ச் 28 அன்று நீதிபதி வர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று (ஏப்ரல் 5) யஷ்வந்த வர்மா பதவியேற்றுக்கொண்டார். நீதிபதிகளுக்கென வழக்கமாக நடைபெறும் பதவிப் பிரமாண விழாக்கள் போலில்லாமல், ஒரு தனியறையில் அவர் நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டாலும், யஷ்வந்த் வர்மா மீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணை முடிவுக்கு வரும் வரையில் அவருக்கு நீதிமன்றத்தில் பணி ஒதுக்கப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பிறகு, ஆறாவது மூத்த நீதிபதியாக யஷ்வந்த் வர்மா உள்ளார்.