இந்தியா

திருப்பதி கோயில் மீது விமானம் பறப்பதற்கு தடை விதிக்கக்கோரி கடிதம்: பின்னணி என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் மகத்தான ஆன்மீக மதிப்பை திருப்பதி கோயில் பெற்றுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர். நாயுடு.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிற்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் பி.ஆர். நாயுடு கூறியதாவது,

`ஒவ்வொரு ஆண்டும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் மகத்தான ஆன்மீக மதிப்பை திருப்பதி கோயில் பெற்றுள்ளது. ஆகம சாஸ்திர விதிகளின்படி, கோயிலின் புனிதத்தன்மையே பிரதானமாகும். அதற்கு அருகே நடைபெறும் வான்வழிப் போக்குவரத்து நடவடிக்கை உட்பட எந்த ஒரு இடையூறும், அதன் ஆன்மீக சூழலை மோசமாக பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.

திருப்பதியில் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற வான்வழி நடவடிக்கைகளால் கோயிலின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

திருப்பதி கோயில் பகுதியை விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிப்பதன் மூலம், பக்தர்களின் அமைதி மற்றும் பக்திக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான சட்டப்பூர்வமற்ற வான்வழி நடவடிக்கைகளை தவிர்க்க முடியும்.

ஆகையால், திருப்பதியின் புனிதத்தன்மையுடன், அதன் கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்கவேண்டும்’ என்றார்.

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அக்கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு உள்ளதால், திருப்பதி கோயிலை சுற்றியுள்ள பகுதி விரைவில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.