ANI
இந்தியா

பாஜகவை குறிவைக்கும் சுக்பீர் சிங் பாதல்: பின்னணி என்ன?

துணை முதல்வராக இருந்தபோது செய்த தவறுகளுக்காக, சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான `அகல் தக்ட்’ சுக்பீர் பாதலுக்குத் தண்டனை விதித்தது.

ராம் அப்பண்ணசாமி

சில மாதங்களுக்கு முன்பு மத ரீதியில் தவறிழைத்ததற்காக தண்டனை பெற்று, சிரோன்மணி அகாலி தளம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில், கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஏப்.12-ல் மீண்டும் தலைவராக சுக்பீர் சிங் பாதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் தங்கள் முன்னாள் அரசியல் கூட்டாளியான பாஜக மற்றும் சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டுள்ளதாக சுக்பீர் பாதல் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார். குறிப்பாக, தன் மீது மத ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு பாஜகவின் சதியே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2007 முதல் 2017 வரை பஞ்சாபில் அகாலி தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி 2020-ல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அகாலி தளம் படுதோல்வியை சந்தித்தது.

நாளடைவில் கட்சிக்குள் சுக்பீர் பாதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதன்பிறகு 2009 முதல் 2017 வரை துணை முதல்வராக இருந்தபோது செய்த தவறுகளுக்காக, சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான `அகல் தக்ட்’ சுக்பீர் பாதலுக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையின்படி அமிர்தசரஸ் பொற்கோயிலில் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

சீக்கிய அரசியலில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தலையிடுவதை அகாலி தளம் அனுமதிப்பதாக நீண்ட காலமாக பஞ்சாப் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தனக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கும், அகாலி தளம் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் பாஜகவே காரணம் என்று மீண்டும் தலைவராகப் பதவியேற்ற கையோடு பாஜகவைத் தாக்கி சுக்பீர் பாதல் பேசியுள்ளது பஞ்சாப் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

சீக்கியர்களுக்கிடையே இழந்த செல்வாக்கை மீட்கவே சுக்பீர் பாதல் இவ்வாறு பேசியதாக சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.