இந்தியா

அம்பேத்கர் சிலைகளை தடிகளுடன் பாதுகாக்க இருக்கும் ஆம் ஆத்மியினர்: பின்னணி என்ன?

சீக்கியர்களுக்கான நீதி குறித்துப் பன்னூன் பேசி வருகிறார். ஆனால் அவர் சீக்கிய மதத்தை மதிப்பது கிடையாது.

ராம் அப்பண்ணசாமி

அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்துமாறு காலிஸ்தான் இயக்கத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் விடுத்த அழைப்பை அடுத்து, ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் சிலைகளை ஆம் ஆத்மி தொண்டர்கள் தடிகளுடன் பாதுகாக்க இருப்பதாக பஞ்சாப் அமைச்சர் அமன் அரோரா அறிவித்துள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் முக்கியமானவர் குர்பத்வந்த் சிங் பன்னூன். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்திருந்தாலும், தற்போது அவர் அமெரிக்காவில் உள்ளார். கடந்த 2020-ல் பன்னூனைத் தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14 அன்று பஞ்சாபில் உள்ள அம்பேத்கர் சிலைகளை சீக்கியர்கள் சேதப்படுத்தக்கோரி பன்னூன் அழைப்பு விடுத்திருந்தார்.

பன்னூனின் இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில வீட்டுவசதி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளின் அமைச்சர் அமன் அரோரா, சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

`ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்துமாறு நீங்கள் அழைப்பு விடுத்துள்ளீர்கள். உங்களுக்கு நான் சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் இங்கே வாருங்கள். பஞ்சாப் முழுவதிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளைச் சுற்றி, அன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலான ஆம் ஆத்மி தொண்டர்கள் தடிகளுடனும், கொடிகளுடனும் பாதுகாப்பிற்காக நின்று, பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செய்வார்கள்.

தலித் சமூகம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டிற்கும் டாக்டர் அம்பேத்கர் பெருமை சேர்த்துள்ளார். அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களின் சின்னமாக அவர் திகழ்கிறார், மேலும் அவரது தொலைநோக்குப் பார்வையால்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இன்று இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கான நீதி குறித்து பன்னூன் பேசி வருகிறார். ஆனால் அவர் சீக்கிய மதத்தை மதிப்பது கிடையாது. சமத்துவத்தை நிலைநிறுத்தி, அனைத்து சமூகங்களின் நலன்களையும் போதிக்கும் சிறந்த மதமாக சீக்கிய மதம் உள்ளது. ஆனால், சமூகத்தில் பிளவுகளை உருவாக்க சீக்கிய மதத்தின் பெயரைப் பன்னூன் பயன்படுத்துகிறார்’ என்றார்.