பிஹார் மாநில வாக்காளர் பட்டியலைத் திருத்தும் வகையிலான, சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 25) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் மாநில வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான இணைப்புகள் மற்றும் நீக்கங்கள் ஆகியவற்றால், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு, சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக விவாதிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை முடக்கி வருகின்றன.
இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 25) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`பிஹாரில் உள்ள மொத்த வாக்காளர்களில் இதுவரை 99.8% வாக்காளர்கள் சரி பார்க்கப்பட்டிருக்கின்றனர்.
7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன; இந்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மீதமுள்ள வாக்காளர்களின் படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் பணி ஆகஸ்ட் 1, 2025-க்குள் நிறைவடையும்.
படிவங்களை நிரப்பாத அல்லது இறந்த மற்றும் நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் ஜூலை 20 அன்று 12 அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டுள்ளன.
ஜூன் 24, 2025 நிலவரப்படி, உள்ளூர் பூத் அலுவலர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் பின்வருவனவற்றைப் பற்றி புகாரளித்துள்ளனர்:
-சுமார் 22 லட்சம் எண்ணிக்கையிலான இறந்த வாக்காளர்களின் பெயர்கள்.
-ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 7 லட்சம் வாக்காளர்கள்.
-சுமார் 35 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
-சுமார் 1.2 லட்சம் வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் இன்னும் பெறப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்திக்குறிப்பை முன்வைத்து இறப்பு, இரு இடங்களில் பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்தல் ஆகிய காரணங்களால், பிஹார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.