ANI
இந்தியா

பிஹார் சிறப்பு தீவிர திருத்தம்: அரசியல் கட்சிகளை கண்டித்த உச்ச நீதிமன்றம்! | Bihar | Supreme Court | SIR

தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையை உபயோகித்து, புகார்களைத் தாக்கல் செய்வதில் பொதுமக்களுக்கு உதவவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

பிஹார் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களுக்கு உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதில் செயலற்ற தன்மை கடைபிடித்ததற்காக பிஹாரில் உள்ள அரசியல் கட்சிகளை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 22) கண்டித்தது.

ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதில் பொதுமக்களுக்கு உதவுமாறு, நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 12 அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது.

`படிவம் 6-ல் உள்ள ஏதேனும் 11 ஆவணங்கள் அல்லது ஆதார் எண் ஆகியவற்றை வைத்து தேவையான படிவங்களை தாக்கல் செய்வதிலும், சமர்ப்பிப்பதிலும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக கட்சித் தொண்டர்களுக்கு பிஹாரில் இருக்கும் 12 அரசியல் கட்சிகளும் குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்க வேண்டும்’ என்று நீதிபதி காந்த் கூறினார்.

அதேநேரம், இந்த சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான காலக்கெடுவை தற்போது மாற்றப்போவதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இந்த நீக்கத்தை எதிர்த்து தங்கள் ஆதார் எண்களை சமர்ப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் முந்தைய விசாரணையில் கூறியது.

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவவேண்டும்

சிறப்பு தீவிர திருத்த நடைமுறை லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

இருப்பினும், சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் வெளிப்பாடாக ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பிஹாரில் 1.68 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் முகவர்கள் (BLA) இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. ஏனென்றால், வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து இதுவரை இரண்டு ஆட்சேபனைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

`அரசியல் கட்சிகளின் செயலற்ற தன்மை எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. பூத் முகவர்களை நியமித்த பிறகு, அவர்கள் என்ன செய்கிறார்கள்? மக்களுக்கும் உள்ளூர் அரசியல்கட்சியனருக்கும் இடையே எதனால் இடைவெளி உள்ளது? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் பேருக்கு ஆட்சேபத்தை எழுப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா அல்லது இறந்துவிட்டார்களா அல்லது தானாக முன்வந்து தங்கள் வசிப்பிடத்தை மாற்றியுள்ளார்களா என்பதை அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் முகவர்களும் சரிபார்க்கவேண்டும்,’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.