தேர்தல் பட்டியலில் கலிதா மாஜி ANI
இந்தியா

சாதாரண தொழிலாளரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்: யார் இந்த கலிதா மாஜி | Kalita Maji | West Bengal |

சில மாதங்களுக்கு முன்பு வரை மற்றவர்கள் வீட்டுப் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்த கரங்கள், இன்று அந்தத் தொகுதி மக்களின் தலையெழுத்தை எழுதும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன...

விவேக்பாரதி

இந்திய ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த வெற்றியே, அது ஒரு சாமானியனுக்கும் அதிகாரத்தின் கதவுகளைத் திறக்கவல்லது என்பதுதான். அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் மாநிலத்தை ஆளும் அளவு உயர்வது மட்டுமில்லை, சமூகத்தில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தவெக தலைவர் விஜய் போன்றவரையும், எளிய வாழ்க்கை வாழும் ஒருவரையும் சரிநிகர் சமானமாக்கும் சக்தி படைத்தது. அதற்கு ஓர் உதாரணத்தை மேற்கு வங்கத்திற்குச் சென்று பார்த்து வரலாம்.

யார் இந்த கலிதா மாஜி?

மாதம் ரூ. 2,500 தான் சம்பளம், மற்றவர் வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி, துப்புரவுப் பணிகள் செய்த ஒரு பெண்மணி, இன்று அதே தொகுதியின் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது, ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்தான் மேற்கு வங்க மாநிலம் அவுஸ்கிராம் தனித்தொகுதியில் வென்றிருக்கும் பாஜக வேட்பாளர் கலிதா மாஜி. மேற்கு வங்கத்தின் கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தில் உள்ள அவுஸ்கிராம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கலிதா மாஜி, வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல; அவர் வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீண்டு வந்த ஒரு போராட்ட வீராங்கனை. சில மாதங்களுக்கு முன்பு வரை மற்றவர்கள் வீட்டுப் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்த கரங்கள், இன்று அந்தத் தொகுதி மக்களின் தலையெழுத்தை எழுதும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

கலிதாவின் தந்தை ஒரு சாதாரண தினக்கூலித் தொழிலாளி. அவருக்கு 7 மகள்கள், ஒரு மகன். தந்தைக்குப் போதிய வருமானம் இல்லாததால் கலிதாவால் முறைப்படி பள்ளிக் கல்வியைக் கூட முடிக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வறுமையின் காரணமாகக் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2006-ல் பிளம்பர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த மகன் இப்போது எட்டாம் வகுப்பு படிக்கிறான். தன் மகனைப் படிக்க வைக்கவும், குடும்பத்தைப் பராமரிக்கவும் கலிதா நான்கு வீடுகளில் துப்புரவுப் பணியாளராகவும், பாத்திரங்களைக் கழுவும் வீட்டு வேலையாளராகவும் சேர்ந்தார்.

மக்கள் பணியில் ஈடுபாடு

வறுமை ஒருபுறம் இருந்தாலும், சமூகத்தின் மீதான அக்கறை அவரை அரசியலை நோக்கி ஈர்த்தது. பாஜகவில் இணைந்து 2021 சட்டசபைத் தேர்தலில் அவுஸ்கிராம் தனித்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கப்பெற்றார். பணமோ, அதிகாரமோ பின்னணியில் இல்லாத கலிதா, அந்தத் தேர்தலில் வெற்றியைத் தவறவிட்டார். ஆனாலும், அவர் துவண்டு விடவில்லை. தனது பழைய வேலைகளையும் கவனித்துக் கொண்டு, மக்களுடனான தொடர்பையும் பேணி வந்தார். அந்தத் தேர்தலில் இதே அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட்டு, 41% வாக்குகளைப் பெற்றிருந்தார். 2026 தேர்தலில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, மக்கள் அவர் மீது மாறாத நம்பிக்கை வைத்தனர்.

கலிதாவின் தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரக் காலங்களில் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் நெகிழ்ச்சியானது. அதிகாலை 5 மணிக்கே எழுந்து, தான் வேலை பார்க்கும் நான்கு வீடுகளுக்கும் சென்று துப்புரவுப் பணிகளை முடித்துவிட்டு வருவார். அதன் பிறகுதான் தன் மகனுக்குச் சோறு ஊட்டி, வீட்டைத் தயார் செய்துவிட்டு, அரசியல் பணிகளுக்காகத் தொகுதியைச் சுற்றி வருவார். மாதம் ரூ. 2,500 முதல் ரூ. 4,500 வரை மட்டுமே ஊதியம் பெற்று வந்த ஒரு பெண்மணி, லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல். "எனக்கு வறுமை என்றால் என்னவென்று தெரியும். ஒரு வேளை உணவிற்காக ஒரு ஏழை எவ்வளவு கஷ்டப்படுவான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் மக்களுக்காகப் பணியாற்ற அரசியலுக்கு வந்தேன்" என்று கலிதா கூறுவது அவரது நேர்மையைப் பறைசாற்றுகிறது.

போட்டியிட்ட துருவங்கள்

இந்தத் தேர்தலில் கலிதா மாஜிக்கு எதிராக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ஷியாமா பிரசன்ன லோஹர். 41 வயதான இவர், சட்டப்படிப்பு முடித்த ஒரு வழக்கறிஞர் ஆவார். செல்வாக்கு மிக்க கட்சிப் பின்னணி மற்றும் சமூக அந்தஸ்து கொண்ட இவரை எதிர்த்து, ஒரு சாதாரண வீட்டு வேலை செய்யும் தொழிலாளியான கலிதா களம் கண்டார்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின்படி, ஷியாமா பிரசன்ன லோஹர் ரூ. 64,41,819 சொத்துகளையும், வாகனங்களையும் கொண்டவர். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலிதா மாஜிக்கு வெறும் ரூ. 4,90,309 மட்டுமே மொத்த சொத்து மதிப்பு. அதிலும் 1 லட்சம் ரூபாய் மட்டுமே அவரது சொந்த சேமிப்பு. மீதி 3 லட்ச ரூபாய் மதிப்பில் இருப்பது பூர்வீக சொத்து. கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் பலம் கொண்ட ஒரு வழக்கறிஞரை, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற உழைக்கும் வர்க்கத்துப் பெண் வீழ்த்தியது மேற்கு வங்க அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவுஸ்கிராம் தொகுதியில் 1,07,692 வாக்குகள் பெற்று கலிதா மாஜி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 12,535 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் கலிதா மாஜி. கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கலிதா, இந்த முறை அதே தொகுதியில் வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் உத்தி

இதைப்பற்றி பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எஸ். சந்தோஷ் கூறுகையில், “நாங்கள் கலிதாவின் கடின உழைப்பையும் தனித்திறனையும் மட்டுமே பார்த்தோம்” என்று தெரிவித்துள்ளார். கலிதா மாஜியின் இந்த வெற்றி என்பது ஒரு தனிநபர் வெற்றி மட்டுமல்ல, இது மேற்கு வங்கத்தின் ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்தின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, சுமார் 15 ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த அரசியல் மாற்றத்தில், கலிதா மாஜி போன்ற அடிமட்டத் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது. "ஒரு சாதாரணத் தொழிலாளியும் சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும்" என்ற நம்பிக்கையை பாஜக இத்தேர்தலில் விதைத்தது, அவுஸ்கிராம் போன்ற கிராமப்புற தொகுதிகளில் அக்கட்சிக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளது.

வெற்றிச் செய்தி வந்த பின்பும் கலிதாவிடம் எந்தத் தலைக்கனமும் இல்லை. இன்றும் தனது சொந்த வேலைகளைத் தானே செய்துகொண்டு, அவுஸ்கிராம் தொகுதியின் ஒரு சாதாரணப் பெண்ணாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். "என்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிப்பேன்" என அவர் உறுதி அளித்துள்ளார்.

ஒரு சாதாரணத் தொழிலாளியாக இருந்து, இன்று சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்துள்ள இவரது சாதனை, விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் எட்ட முடியாத தூரம் எதுவுமில்லை என்பதை மெய்ப்பிக்கிறது.

இந்திய ஜனநாயகம் பல தருணங்களில் சாமானியர்களின் கரங்களில் வலிமையான ஆயுதமாக மாறியிருக்கிறது. வசதி படைத்தவர்களாலும், பரம்பரை அரசியல் பின்னணி கொண்டவர்களாலும் மட்டுமே எட்ட முடியும் என்று கருதப்பட்ட அதிகாரப் பீடங்களை, சாதாரண உழைக்கும் வர்க்கத்தினர் எட்டிப் பிடிக்கும்போதுதான் ஜனநாயகம் அதன் முழு அழகையும் பெறுகிறது.

From washing dishes in others’ homes to becoming an MLA in West Bengal, Kalita Maji’s victory proves Indian democracy can still open the doors of power to ordinary people.