ANI
இந்தியா

சிபிஐ-க்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்தது: உச்ச நீதிமன்றம்

பொது அனுமதியை 2018-ல் ரத்து செய்ததால், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை மேற்கொள்வது தவறு என்று மேற்கு வங்க அரசு வாதிட்டது

ராம் அப்பண்ணசாமி

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சந்தேஷ்காளி வழக்கை சிபிஐ விசாரிப்பது குறித்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

சிபிஐ அமைப்பு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள அமலில் இருந்த பொது அனுமதியை 2018-ல் ரத்து செய்தது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு. ஆனால் சந்தேஷ்காளி விவகாரத்தில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ அமைப்பு தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் இந்த வருடத்தின் துவக்கத்தில் பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மாநில அரசு பலரைக் கைது செய்து சிறையிலடைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ-யும் சந்தேஷ்காளி விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மேற்கு வங்க அரசு, பொது அனுமதியை 2018-ல் ரத்து செய்ததால், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை மேற்கொள்வது தவறு என்று வாதிட்டது. இதனை எதிர்த்து, மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டது மத்திய அரசு.

இந்நிலையில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்தது என்று மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் இன்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசின் மனு மீது உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்த இருக்கிறது.

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு பிரச்சனை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.