இந்தியா

நீட் விவகாரத்தில் மத்திய அரசுடன் சண்டை போட விரும்பவில்லை: ராகுல் காந்தி

ராம் அப்பண்ணசாமி

நீட் தேர்வு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாள் முழுவதும் மக்களவையை ஒத்தி வைத்து அறிவித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இந்நிலையில் நீட் தேர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் குறித்து ராகுல் காந்தி காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது பின்வருமாறு:

`நீட்டைப் பொருத்தவரை மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. நீட்தேர்வில் வினாத்தாள் கசிந்தது குறித்து அனைவருக்கும் தெரியும். அதை வைத்து ரூ. 1000 கோடி அளவில் காசு பார்க்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர். மருத்துவப் படிப்பை படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வருடக்கணக்கில் நீட் நுழைவுத் தேர்வுக்கு கஷ்டப்பட்டுத் தயாராகி வந்த மாணவர்களின் கனவுகள் இதனால் தகர்ந்துள்ளன.

இதனால் நேற்று நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், `மாணவர்கள் நம் எதிர்காலம். அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்த (மக்களவையில்) ஒரு நாள் நாம் நீட் தேர்வு குறித்து விவாதிப்பதில் செலவிட வேண்டும்’ என்று நான் பேசினேன். நான் கூறியதை எதிர்க்கட்சிகள் ஒரு மனதாக ஆமோதித்தன. இந்த விவாதத்தை அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் மேற்கொள்ளவும் நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப நான் முயற்சி செய்தேன். ஆனால் என்னைப் பேசவிடவில்லை. இந்த விவகாரம் 2 கோடி மாணவர்களை பாதித்துள்ளது. கடந்த 7 வருடங்களில் 70 முறை வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது. இதனால் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது இப்படியே தொடரக்கூடாது. மாணவர்கள் இதற்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கு ஒரு தீர்வு நிச்சயமாக வேண்டும். ஏனென்றால் கோடிக்கணக்கான மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருக்கின்றனர். நியாயமாகப் பார்த்தால் இந்த விவகாரத்தைப் பற்றிய விவாதத்தை பிரதமர் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அடுத்த என்ன செய்யப் போகிறார் என்று அவர் தெரிவித்திருக்க வெண்டும். அரசுடன் நாங்கள் சண்டைபோட விரும்பவில்லை, எங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவே விரும்புகிறோம்’.