கோப்புப்படம்
கோப்புப்படம் 
இந்தியா

ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் மமதா கலந்துகொள்ள வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் மேற்கு வங்கத்தை அடைந்துள்ள நிலையில், அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி இதில் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமைக்கான நடைப்பயணம் இன்று (வியாழக்கிழமை) மேற்கு வங்கத்தை அடைந்தது. இந்த நடைப்பயணம் மேற்கு வங்கம் வருவது குறித்து மரியாதைக்குக்கூட எதுவும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் தனித்துப் போட்டியிடும் என்றும் மமதா பானர்ஜி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணியின் மிக முக்கியமானத் தூண் மமதா என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இந்த நிலையில், ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் மமதா பானர்ஜி கலந்துகொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

"28 கட்சிகளை உள்ளடக்கியுள்ள இண்டியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் மிக முக்கியமானத் தூண் என்பதை நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மமதா பானர்ஜி நாட்டின் அனுபவம் மிக்க, வலிமையான தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். இந்திய அரசியலில் அவருக்கென்று தனி இடம், அடையாளம் உள்ளதை அனைவரும் அறிவார்கள். அவருக்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது என்பதை நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். எங்களுக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும். நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். இது எங்களது கடமை.

ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு மமதா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி என அனைவருக்கும் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. குறிப்பாக முதல்வரே கலந்துகொள்ள வேண்டும். 10-15 நிமிடங்கள் கலந்துகொண்டாலும், அது பெரிய தாக்கத்தை உண்டாக்கும்" என்றார் அவர்.