ANI
இந்தியா

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளோம் - பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

கன்னியாகுமரியில் 45 மணி நேர தியானத்தை முடித்துவிட்டு விமானத்தில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தபோது அங்கே தன் மனதில் உதித்த எண்ணங்கள் பற்றி பொது மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி.

”நாட்டுக்காகவும், வருங்கால சந்ததியினருக்குப் பலமான அடித்தளத்தை அமைக்கவும், அடுத்த 25 வருடங்களை இந்திய மக்கள் அர்ப்பணிக்க வேண்டுமென” எனக் குறிப்பிட்டுள்ள மோடி, ’பாரதத்தின் வளர்ச்சியை உலகத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், அதற்கு முதலில் பாரதத்தின் உள்ளார்ந்த திறனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

’அமைதியான சூழலில் தியானம் மேற்கொண்டிருந்தபோதுகூட என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்தும், பாரதத்தின் இலக்குகள் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தது. இத்தனைப் பொறுப்புகளுக்கு நடுவே தியானம் மேற்கொள்வது மிகவும் சவாலாக இருந்தது’ என்று தன் தியான அனுபவம் குறித்து அவர் எழுதியுள்ளார்.

’பலவித அனுபவங்களும் உணர்ச்சிகளும் என் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது. எல்லையில்லா ஆற்றல் எனக்குள் பரவுவதை நான் உணர்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

’கன்னியாகுமரி என் மனதுக்கு நெருக்கமான இடம். இங்குள்ள விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம் ஏக்னாத் ரானாடே தலைமையில் உருவானது. ஏக்னாத் ஜீ அவர்களுடன் ஒன்றாகப் பயணிக்கும் வாய்ப்பு முன்பு எனக்குக் கிடைத்தது. இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது கன்னியாகுமரில் நான் சில காலம் இருந்துள்ளேன்’ என்று கன்னியாகுமரிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதியுள்ளார் மோடி.

’இன்று பாரதத்தின் ஆட்சி மாடலானது உலகின் பல நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. 10 வருடங்களில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது போல இதற்கு முன்பு நடந்ததில்லை. ஒரு தேசமாக காலாவதியான சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’அடுத்த 25 வருடங்களை தேசத்துக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும். நமது முயற்சிகள் பாரதத்தைப் பல புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த பாரத்தை உருவாக்குவோம்’ என்று இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்துத் தன் கடிதத்தை நிறைவு செய்துள்ளார் பிரதமர் மோடி.