கோப்புப்படம் 
இந்தியா

ரைட் சகோதரர்களுக்கு முன்பே புஷ்பக விமானம்: ஷிவ்ராஜ் சௌஹான் பேச்சால் சர்ச்சை! | Shivraj Singh Chouhan

முன்னதாக, விண்வெளிக்கு முதன்முதலாகச் சென்றது அனுமன்தான் என பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் பேசியது சர்ச்சையானது.

கிழக்கு நியூஸ்

ரைட் சகோதரர்களுக்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள போபால் இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் உரையாடினார்.

"ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. இன்று நம்மிடம் இருக்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள் அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்தன. இவை அனைத்தையும் நாம் மகாபாரத்தில் வாசித்துள்ளோம். நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி கண்டுள்ளன" என்றார் ஷிவ்ராஜ் சிங் சௌஹான்.

முன்னதாக, ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேசிய விண்வெளி நாளில் பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பாஜக எம்.பி. அனுராக் தாக்குர், விண்வெளிக்கு முதன்முதலாகச் சென்றது அனுமன்தான் என்றார். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என மாணவர்கள் பதிலைக் கூறியபோது, அனுராக் தாக்குர் இவ்வாறு கூறினார். இது சர்ச்சையாகி ஓய்வதற்குள் ஷிவ்ராஜ் சௌஹான் கூறியிருப்பது தற்போது மேலும் சர்ச்சையாகியுள்ளது.

ஷிவ்ராஜ் சிங் சௌஹான் இதுபோன்ற கருத்தைத் தெரிவிப்பது இது முதன்முறையல்ல. மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோதும் புஷ்பக விமானங்கள் குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

1903-ல் ரைட் சகோதரர்கள் தான் முதன்முதலாக விமானத்தை இயக்கினார்கள்.

Shivraj Singh Chouhan | Wright Brothers | Pushpak Vimanam