படம்: ANI
இந்தியா

வாக்கு இயந்திரம் வேண்டாம், வாக்குச் சீட்டு முறையே போதும்: காங்கிரஸ் தலைவர் கார்கே

"பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வாக்கு இயந்திரங்களை அவர்களுடைய இல்லத்திலேயே வைத்துக்கொள்ளட்டும்."

கிழக்கு நியூஸ்

வாக்கு இயந்திரம் வேண்டாம், வாக்குச் சீட்டு முறையே போதும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நாளை முன்னிட்டு தில்லி தால்கடோரா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

"எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஏழை வகுப்பினரின் வாக்குகள் வீணாகின்றன. வாக்கு இயந்திரங்கள் எங்களுக்கு வேண்டாம். வாக்குச் சீட்டு முறையே எங்களுக்குப் போதும். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வாக்கு இயந்திரங்களை அவர்களுடைய இல்லத்திலேயே வைத்துக்கொள்ளட்டும். பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை என்ன என்பது அப்போதுதான் தெரியும்.

காங்கிரஸ் சார்பில் நாம் பேரணியைத் தொடங்க வேண்டும். வாக்குச் சீட்டு கோரி ராகுல் காந்தி தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பாரத் ஜோடோ யாத்திரையைப் போல ஒரு பேரணியை மேற்கொள்ள வேண்டும்" என்றார் மல்லிகார்ஜுன கார்கே.

மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கார்கே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.