ANI
இந்தியா

ஜம்மு - காஷ்மிர் மக்களுக்குச் சமூக நீதியைக் கொண்டு வந்துள்ளோம்: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

ஜம்மு - காஷ்மிர் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சமூக நீதியைத் தாங்கள் கொண்டு வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 31 அன்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்ரவரி 10 வரை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இதுவே 17-வது மக்களவையின் கடைசிக் கூட்டத்தொடரின், கடைசி அமர்வு. இந்த அமர்வில் எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

"சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் நிறைந்ததாகக் கடந்த 5 ஆண்டுகள் இருந்தன. சீர்திருத்தமும், செயல்பாடும் ஒரே ஆண்டில் நிகழ்வது அரிது. 17-வது மக்களவையின் ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் வேண்டும் என அனைவரும் கூறினார்கள். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உங்களுடைய (மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா) தலைமையின் கீழ் இது முடிவு செய்யப்பட்டு, முன்னெடுக்கப்பட்டது. அரசுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக நாட்டுக்கு இந்தப் புதிய நாடாளுமன்றம் கிடைத்துள்ளது.

ஜம்மு - காஷ்மிர் மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டு வந்தது. இன்று ஜம்மு - காஷ்மிர் மக்களுக்கு சமூக நீதியைக் கொண்டு வந்துள்ளோம் என்கிற திருப்தி எங்களுக்கு உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.

ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது. இது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை.

தேர்தல் வெகுதொலைவில் இல்லை. சிலர் பதற்றமாக இருக்கலாம். ஆனால், இது ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சம். இதைப் பெருமையுடன் ஏற்றுக்கொள்வோம். நமது தேர்தல்கள் ஜனநாயக மரபைப் பின்பற்றி நாட்டின் பெருமையை அதிகரித்து உலகை ஆச்சர்யப்படுத்தும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.