ANI
இந்தியா

வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக உயர்வு

லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன் லால், வயநாட்டுக்கு ராணுவ சீருடையில் சென்று பார்வையிட்டார்.

கிழக்கு நியூஸ்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

சூரல்மலா மற்றும் முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து 5-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 308 ஆக உள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அளித்த தகவலின்படி, இன்று காலை 7 மணி முதல் மோப்ப நாய்கள் மூலம் தேடும் பணி தொடர்ந்துள்ளது. ஹிடாச்சி உபகரணங்களை எடுத்துச் செல்வதற்காக பஞ்சிரிமட்டோம் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

நடிகர் மோகன் லால் முண்டக்கை கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டார். துணை ராணுவப் படையின் லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் மோகன் லால் ராணுவ சீருடையில் சென்றிருந்தார். மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவப் படையினரைச் சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கினார். மேலும் விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ. 3 கோடி நன்கொடை வழங்கப்படும் என்றும் மோகன்லால் தெரிவித்தார்.