ANI
இந்தியா

தில்லியில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை

கிழக்கு நியூஸ்

வெப்ப அலையில் சிக்கித் தவித்து வரும் தில்லி மக்கள் அங்கு நிலவி வரும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் தங்களின் அன்றாட நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய டேங்கர் லாரிகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரை நம்பியுள்ளனர்.

கடந்த வாரம் தில்லியின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு 50 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையும் தலைதூக்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தில்லி அரசு, நீரை வீணடித்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் எனக் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் வசீராபாத் தடுப்பணையிலிருந்து நீரைத் திறந்துவிட ஹரியானா அரசுக்கு உத்தரவிடுமாறு கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது தில்லி அரசு. இந்த மனு மீதான விசாரணை ஜூன் மாதம் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

வரலாறு காணாத வெப்ப அலையுடன் யமுனை நதிக்கரையில் நீர்வரத்து குறைந்த காரணத்தால் இந்த வருட கோடைக் காலத்தில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதாக தில்லி அமைச்சர் அதிஷி, தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.