நியூஸ்18 இந்தியா நிகழ்ச்சியில் பேன்ட் அணியாமல் கலந்துகொண்டதாகக் கருதப்பட்டு வருவது தொடர்புடைய கருத்துகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கக்கோரி பாஜக தலைவர் கௌரவ் பாடியா தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
பாஜக தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கௌரவ் பாடியா அண்மையில் நியூஸ்18 இந்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது குர்தா அணிந்திருந்த அவர் கீழே பேன்ட் அணியாமல் இருந்ததாகக் கூறப்பட்டன. அவர் வணக்கம் சொல்லும்போது, அவருடைய இடுப்புக்குக் கீழ் கால்களும் கேமராவில் பதிவாகின. கேமரா மேன் தவறுதலாகப் பதிவு செய்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வீட்டிலிருந்தபடி அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தெரிகிறது.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவியது. காணொளி குறித்த கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் கௌரவ் பாடியா. இவர் சார்பாக வழக்கறிஞர் ராகவ் அவாஸ்தி நீதிமன்றத்தில் வாதிடுகையில், "கௌரவ் பாடியா ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அவருடைய கால்கள் தெரியும் வகையில், கேமரா மேன் தவறுதலாகக் காட்சிப்படுத்திவிட்டார். கௌரவ் பாடியாவின் தனியுரிமையை மீறும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய கமெண்டுகள் நீக்கப்பட வேண்டும்" என்றார். மேலும் இதுதொடர்புடைய பதிவுகளை நீக்கக்கோரி சமாஜ்வாதி கட்சியின் ஊடகப் பிரிவு பக்கம், செய்தித் தளமான நியூஸ்லாண்டரி, ஆம் ஆத்மியின் சௌரவ் பரத்வாஜ், அபிசார் சர்மா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் இதை செவ்வாய்க்கிழமை விசாரித்தார். இதுதொடர்பாக வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gaurav Bhatia | BJP Leader | Television Show | Delhi High Court |