இந்தியா

வக்ஃபு சட்ட மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

அறிக்கையை அளிக்க கூட்டுக்குழுவின் தலைவர் அவசரம் காட்டுவதாகவும், சில மாநில வக்ஃபு வாரியங்களின் கருத்துகளை இன்னும் கேட்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

ராம் அப்பண்ணசாமி

வக்ஃபு (திருத்தச்) சட்ட மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டித்து இன்று (நவ.28) ஒப்புதல் வழங்கியுள்ளது மக்களவை.

1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்த ஆகஸ்ட் 8-ல் வக்ஃபு (திருத்தச்) சட்டமசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து  இந்த சட்டமசோதா குறித்து ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்க, ஆக.13-ல் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

21 மக்களவை மற்றும் 10 மாநிலங்களவை எம்.பி.க்களை (13 எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) உறுப்பினர்களாக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டுக்குழுவின் தலைவராக பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் நியமிக்கப்பட்டார். நவ.29-ல் கூட்டுக்குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. வக்ஃபு சட்டதிருத்த மசோதா தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வஃக்பு வாரியங்களின் கருத்துகளை கேட்டுவந்தது இந்த கூட்டுக்குழு.

நேற்று (நவ.27) நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய ஆ. ராசா, கல்யாண் பானர்ஜி, சஞ்சய் சிங், கௌரவ் கோகாய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அறிக்கையை அளிக்க கூட்டுக்குழுவின் தலைவர் அவசரம் காட்டுவதாகவும், சில மாநில வக்ஃபு வாரியங்களின் கருத்துகளை இன்னும் கேட்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

கடந்த நவ.25-ல் மக்களவை சபாநாயகரை சந்தித்து கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம் வழங்கினர். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் வரை கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இன்று காலை மக்களவையில் தாக்கல் செய்தார் ஜெகதாம்பிகா பால்.

இதனை அடுத்து வக்ஃபு (திருத்தச்) சட்ட மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கியது மக்களவை.